A day at Manicks art academy

இம்மாதம் 11ஆம் தேதி திருச்சி காட்டூர் அம்மன் நகரில் இருக்கும் மாணிக்ஸ் ஆர்ட அகாடமிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
குழந்தைகளுடன் குதூகலமாய் நம்மை வரவேற்றார் மாணிக்கவாசகம் ஐயா. திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர், சிறந்த ஓவியர், பண்பாளர், திருச்சியின் நீள அகலங்களை தன் தத்துரூபமான ஓவியங்கள் மூலம் ஆவணப்படுத்திக் கொண்டிருப்பவர், தனது ஓய்வு காலத்தில் குழந்தைகளுக்கு ஓவியம் சொல்லிக் கொடுப்பதில் மகிழ்ச்சி காண்பவர் என இவரைப் பற்றி சொல்வதற்கு நிறைய உண்டு.
அவர் நடத்தும் ஏழு நாள் குழந்தைகளுக்கான கோடைகால ஓவிய பயிற்சி பட்டறையின் ஐந்தாவது நாளை நேரலையில் வழங்குவதற்காக சென்றிருந்தேன்.
எப்படி வர்றீங்க நான் வண்டி அனுப்பட்டுமா என்று முதல் நாளே அவருடைய உபசரிப்பு தொடங்கி விட்டது. சென்று சேர்ந்தவடன் மலர்ந்த புன்னகையோடு இரு கரம் கூப்பி வரவேற்று தனது கலைக்கூடத்தை சுற்றி காண்பித்தார்.
தத்ரூபமான ஓவியங்கள். இதுவே சரியான வார்த்தை. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி கன்னத்து தோல் சுருங்கி கண்கள் இடுங்க தலைப்பாகையோடு நம்மை ஊடுருவி பார்க்கும் கிராமத்து விவசாயி வரை பலதரப்பட்ட மனிதர்களை ஆவணப்படுத்தி இருந்தார்.
திருச்சியின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை, சென்னை அரசு நுண்கலை கல்லூரியை அவர் அங்கு படித்த காலத்திலேயே வரைந்த மரக்கிளைகளுக்கு இடையே தெரியும் இரண்டு கட்டிடங்கள் அடங்கிய ஓவியம், நவீன ஓவியங்கள், புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் ஓவியம், தன் மகளை, மகனை, தந்தையை என பலரை வரைந்து வைத்திருந்தார்.
நான் பார்த்தது மிகச் சொற்பம் தானாம் இன்னும் அந்த அறையில் இருக்கும் பெட்டிகளுக்கு உள்ளே பல்லாயிரம் ஓவியங்கள் இருப்பதாக பயிற்சிக்கு வந்த குட்டி தேவதையொன்று என்னிடம் கூறியது.
ஆரம்ப அறிமுகங்கள் நடந்து கொண்டிருந்த போது மிக அமைதியாய் நாற்காலியில் அமர்ந்து குழந்தைகளை ரசித்துக் கொண்டிருந்த கலாமணி அம்மாவை நமக்கு அறிமுகப்படுத்தினார், என் மனைவி. 
வணக்கம் சொல்லி, சிறு வெட்கத்தோடு என்கிட்ட எதுவும் கேள்வி கேட்றாதீங்க என்று யதார்த்தமான புன்னகையோடு சூழ்நிலையை மேலும் இலகுவாக்கினார் கலாமணி அம்மா.
நிகழ்ச்சி தொடங்கியது.
கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு சிறு குழந்தைகளுக்கு ஓவியங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏன் தோன்றியது என கேள்வியை ஆரம்பித்தேன். நிதானமாக மிகத் தெளிவாக பதில் அளித்தார்.
குழந்தைகளுக்கு பிடித்த பாடல்களை சொல்லச் சொல்லி என்னை அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். பலருக்கும் நடிகர் விஜயை பிடிப்பதாக சொன்னார்கள். தீ தளபதி பாட்டுக்கு நிறைய ஓட்டுகள் விழுந்தன. ஆனால் ஒளிபரப்பியது என்னவோ ரஞ்சிதமே பாடல் தான். 
வரிசையாக ஒவ்வொரு குழந்தையிடமும் பேசி சென்றேன். இயல்பான கூச்சத்தோடும், தெற்றுப்பல் சிரிப்போடும் மிக சுவாரசியமாய் சென்றது ஒரு மணி நேரம். 
நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
எனக்கு வரைந்து காண்பிக்கிறேன் என்று மேஜையின் மேல் இருந்த பரங்கிக்காய் உருளைக்கிழங்கு தக்காளியை குழந்தைகளுக்குச் சொல்லிக் காட்டிக்கொண்டே வரைந்து காட்டினார். குழந்தைகள் அவரிடம் சந்தேகம் கேட்க தொடங்கினர். 
நான் மெல்ல நழுவி கலாமணி அம்மாவை சந்திக்க கீழே சென்றேன். வீடு அற்புதமாக இருந்தது. ஐயாவின் மாணவர் ஒருவர் வடிவமைத்ததாக சொன்னார்கள். தேனீரோடு அய்யாவின் 2 மூத்த மாணவிகள் என நால்வராய் அமர்ந்து பேச தொடங்கினோம்.
தன் பிள்ளைகள் பற்றி சொன்னார். ரேடியோவில் இருந்து வர்றீங்க ரொம்ப விறைப்பா இருப்பீங்கன்னு நினைச்சோம் என்றார். சிரித்தேன். தன் பிள்ளைகள் வாங்கிய பரிசுகளை காண்பித்து பெருமை பட்டார். சிறுவயதிலேயே அவர்களுக்கு இருந்த ஓவிய ஆர்வத்தை சிலாகித்து சொன்னார். இன்றும் NIT வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில் அவர்கள் வரைந்த ஓவியங்கள் இருப்பதாய் சொன்னார். ஐயாவின் கலை ஆர்வத்திற்கு ஏற்றது கலாமணி என்கிற உங்கள் பெயர் என்றேன் நன்கு சிரித்தார். மாணவிகளுள் ஒருவர் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்யும்படி பரிந்துரைத்தார்.
ஆங்காங்கே.புத்தர் ஓவியங்கள், போதுமான சூரிய வெளிச்சம் பெரிய சமையலறை என மிக அழகாய் இருந்தது வீடு.
இதற்குள் என்னை தேடி கீழே இறங்கி வந்து விட்டார் ஐயா. என்னை பற்றி சிறிது விரிவாகச் சொன்னேன். மேலே சென்று எல்லோருமாய் ஒரு புகைப்படம் எடுக்கலாம் என்றேன். எங்க நான் தெரியல என்ற குழந்தைகளோடு குழந்தையாய் குதுகளித்தார்.
வகுப்பு நிறைவடையும் நேரம் வந்தது ஒவ்வொரு குழந்தையாக கூப்பிட ஆள் வந்தது. இதற்கு நடுவே குழந்தைகளுடன் அமர்ந்து அவர்கள் காட்டிய அத்தனை ஓவியங்களையும் மகிழ்ச்சியோடு ரசித்தேன். சாப்பிட்டு விட்டு போகலாம் என்றார், இருக்கட்டும் சார் என்று கீழே வந்து கலாமணி அம்மாவிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
மகிழ்ச்சியான, நிறைவான ஒரு நாள். குழந்தைகளோடு ஒரு நாள். 
மனம் நிறைந்தது.

Comments

Popular posts from this blog

WELCOME

ElectioN TIME